தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்துக்கு அருகே புறநகர்ப் பகுதியான ஷம்ஷாபாத்தைச் சேர்ந்த 27 வயது கால்நடை மருத்துவர், நவம்பர் 27, 2019 அன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக முகமது ஆரிப், சிந்தகுண்டா சென்னகேசவுலு, ஜோலு சிவா, நவீன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி குற்றவாளிகள் 4 பேரையும் தெலங்கானா மாநில காவல்துறை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றது.
அவர்களின் என்கவுன்ட்டர் தொடர்பாகத் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், என்கவுன்ட்டர் தொடர்பாக 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைத்து, என்கவுன்ட்டருக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து விசாரிக்கவும், ஆறு மாதங்களில் அறிக்கையைச் சமர்ப்பிக்கவும் டிசம்பர் 12, 2019 அன்று உத்தரவிட்டது. இந்த விசாரணை ஆணையத்தில் முன்னாள் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ரேகா சொந்தூர் பல்டோடா, முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் டி.ஆர் கார்த்திகேயன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணையை நிறைவு செய்த விசாரணைக்குழு, உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், “கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் என்கவுன்ட்டர் செய்யப்பட 4 பேரும், காவல்துறையால் வேண்டுமென்றே என்கவுன்ட்டர் செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும், அவர்களில் மூன்று பேர் சம்பவத்தின்போது 20 வயது நிரம்பியவர்கள். இந்த விவகாரத்தில் ஹைதராபாத் காவல்துறையின் நடவடிக்கை மிக மோசமாக இருந்திருக்கிறது. குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் கால்நடை மருத்துவரின் உடல் எங்குக் கண்டெடுக்கப்பட்டதோ, அதே பகுதிக்கு அருகே NH-44-ல் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த விவகாரத்தில் 10 காவலர்கள் கொலைக்குற்றம் செய்திருக்கின்றனர்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.