ஒவ்வோர் ஆண்டும் திருத்துறைப் பூண்டியில் நடைபெறும் நெல் திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டும் நடைபெற இருக்கிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள ஏ.ஆர்.வி. தனலட்சுமி திருமண அரங்கில் வருகிற மே 21, 22 , சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் தேசிய அளவிலான நெல் திருவிழா நடைபெறவுள்ளது. ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பர்ய நெல் பாதுகாப்பு மையம் இவ்விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் பாரம்பர்ய நெல் ரகங்களின் மகத்துவம் குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்திப்பதால், மக்களின் உடல் ஆரோக்கியத்திற்கு பல வகைகளிலும் உறுதுணையாக உள்ளது. இதனை சாகுபடி செய்யும் விவசாயிகளும் கூடுதல் பலன் அடைகிறார்கள். வறட்சி மற்றும் வெள்ளம், பூச்சி, நோய்த்தாக்குதல்களை எதிர்கொண்டு வெற்றிகரமான விளைச்சல் கொடுப்பதால், விவசாயிகளுக்கு உத்தரவாதமான வருமானம் கிடைக்கிறது.
இயற்கை வேளாண்மையில் பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்படுவதால், பெருமளவு செலவு குறைந்து, வழக்கத்தை விட கூடுதல் லாபம் கிடைக்கிறது. இந்நிலையில் பாரம்பர்ய நெல் ரகங்களை பரவலாக்கும் நோக்கத்தோடும், இயற்கை வேளாண்மையின் அவசியம் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே செயல்படும் ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பர்ய நெல் பாதுகாப்பு மையத்தினர், பாரம்பர்ய நெல் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இதில் முன்னோடி இயற்கை விவசாயிகள், வேளாண் வல்லுநர்கள், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள், திரைப்படத்துறையினர், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பாரம்பர்ய விதைகளை வழங்கி, விழாப் பேருரை ஆற்றுகிறார்.