நடிகர் சல்மான் கானின் இளைய சகோதரர் சோஹைல் கான் சீமா சச்சிதேவ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு கடந்த 24 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு நிர்வான் மற்றும் யோஹன் ஆகிய இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சமீப காலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். தற்போது இருவரும் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளனர். நேற்று மும்பை பாந்த்ராவில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்திற்கு இருவரும் வந்திருந்தனர். இருவரும் நீதிபதி முன்பு ஆஜராகி விவாகரத்துக்கான ஆவணங்களை தாக்கல் செய்தனர். இருவரும் நட்புடன் கோர்ட்டில் பழகிக்கொண்டனர்.
ஆனால் புறப்பட்டுச் செல்லும்போது இருவரும் தனித்தனியாக சென்றனர். இது குறித்து சீமா கான் தரப்பில் கேட்டதற்கு, எங்களது திருமணம் வழக்கமான ஒன்று கிடையாது. ஆனால் நாங்கள் குடும்பமாக இருந்தோம். நாங்கள் ஒரு குழு அவ்வளவுதான். எனக்கும், அவருக்கும் எங்களது குழந்தைகள் தான் முக்கியம். நாங்கள் வளர்ச்சியடையும் போது வேறு வேறு வழியில் செல்கிறோம். விவாகரத்துக்காக நான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை. ஏனென்றால் எங்களுக்கும், எங்களது குழந்தைகளுக்கும் மகிழ்ச்சிதான் என்று தெரிவித்தார்.