ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு, எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கால்கள் செயலிழந்த நிலையில், மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் நடைபாதையில் தவழ்ந்தபடி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்களிடம் தன்னுடைய நிலைமை குறித்து புலம்பியபடி சென்றார்.
இதையடுத்து, அவரிடம் சென்று கேட்டபோது, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த உதயகுமார் (34), என்றும் இலவச நான்கு சக்கர வாகனம் கேட்டு ஐந்து ஆண்டுகளாக அலைந்து வருவதாகும் வேதனையுடன் தெரிவித்தார்.
அவரிடம் மெல்ல பேச்சுக்கொடுத்தோம். “நான் பி.இ எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் முடித்துள்ளேன். என்னோடு உடன் பிறந்த அண்ணன்கள் இருவரும் வெளியூரில் வேலை பாத்துட்டு வராங்க, அப்பா இறந்துட்டாங்க. நானும் அம்மாவும் மட்டும்தான் பரமக்குடியில் இருக்கோம். எலக்ட்ரிக்கல் படிச்சு முடிச்சு இருக்கேன், ஆனாலும் கால்கள் செயலிழந்து விட்டதால கம்பெனிகள் என்னை வேலைக்கு எடுக்க தயங்கினாங்க. அதனால பரமக்குடியில வீடுகள், கடைகளில் எங்காவது எலக்ட்ரிகல் வேலை சொன்னாங்கன்னா அதை செஞ்சிட்டு வர்றேன்.