நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் கடந்த 14-ம் தேதி இரவு கல்குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில், 6 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். அதில் இருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவரின் உடலை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கல்குவாரி விபத்துக்குக் காரணமான உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை ரயில் நிலையம் முன்பாக மாவட்டத் தலைவர் தயா சங்கர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவரான சசிகலா புஷ்பா கலந்து கொண்டார்
ஆர்ப்பாட்டத்தில் பேசிய சசிகலா புஷ்பா, “நெல்லை மாவட்டத்தில் கல்குவாரியில் விபத்து ஏற்பட்டு 6 பேர் உயிருக்குப் போராடியபோது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தன் மகனுடைய நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் முதல் காட்சியைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தில் தலையிட்ட பிறகே மீட்புப் பணிகள் வேகமாக நடந்தன.
தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் யாருக்கும் குவாரி கிடையாது. ஆனால் ஆளுங்கட்சியினர் பலரும் அவர்களின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்காரர்களும் கல்குவாரி நடத்துகிறார்கள்.நெல்லையில் விபத்து நடந்த கல்குவாரி காங்கிரஸ்காரருக்குச் சொந்தமானது. அதனால் சபாநாயகர் அப்பாவு இந்த விபத்தை மறைக்கத் திட்டமிட்டுச் செயல்பட்டார்.
நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பான உண்மை நிலையைக் கண்டறிய சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்க வேண்டும்.
விபத்து நடந்த குவாரியின் உரிமையாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும். மக்கள் பிரச்னைகள் ஏராளமாக இருக்கும் போது, தமிழக முதல்வர் திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மக்களின் குறைகளைக் கேட்பதற்கு தயாராக இல்லாத தி.மு.க ஆட்சிக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என்றார்.