ஒரு பயணத்தில் அந்நியர்களாக அறிமுகமானாலும், ஒரு சில காட்சிகளிலேயே கார்த்திக் ஆர்யனுக்கும், கியாரா அத்வானிக்கும் ஒரு பிணைப்பு ஏற்படுகிறது. ஒரு பொய்யை மறைப்பதற்காகவும், வீட்டில் நல்லது நடப்பதற்காகவும், பூட்டப்பட்ட புராதன அரண்மனை ஒன்றில் சென்று தங்குகிறது இந்த ஜோடி. அந்த அரண்மனையின் ஓர் அறையில்தான் மஞ்சுலிகாவின் ஆவியை (பாலிவுட் சந்திரமுகி) மந்திர தாந்திரிகங்களின் உதவியுடன் அடைத்து வைத்திருக்கின்றனர்.
சமய, சந்தர்ப்பங்களால் கியாராவின் குடும்பம் உட்பட, கிராமம் முழுவதற்கும் ‘ரூ பாபா’ என்னும் சாமியாராகிறார் கார்த்திக் ஆர்யன். தன்னால் இறந்தவர்களுடன் பேச முடியும் என்றும் நம்ப வைக்கிறார். பின்னர் என்ன, ஒரு சுபயோக சுப தினத்தில், அதே சமய சந்தர்ப்பங்களால் கார்த்திக் ஆர்யன் மஞ்சுலிகாவின் அறையைத் திறந்துவிட, வெளிவரும் மஞ்சுலிகா, பல்வேறு ரகசியங்களையும் வெளிக்கொண்டு வருகிறாள். இறுதியில் கியாராவின் பெரிய குடும்பம், கார்த்திக் ஆர்யன் உதவியுடன் மஞ்சுலிகாவை சமாளித்ததா இல்லையா என்பதுதான் கதை.
தமிழ் சினிமாவில் எப்படி ‘சந்திரமுகி’ ஒரு கிளாசிக் படமோ, அதேபோல்தான் பாலிவுட்டில் ‘Bhool Bhulaiyaa’. அக்ஷய் குமார், வித்யா பாலன் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் சூப்பர்ஹிட்டான படம். தற்போது இயக்குநர் அனீஸ் பாஸ்மீ, ஆகாஷ் கௌசிக்கின் கதையை ‘Bhool Bhulaiyaa 2’-வாக மாற்றியிருக்கிறார். டெம்ப்ளேட் அதேதான் என்றாலும், ‘அரண்மனை’, ‘காஞ்சனா’ படங்களின் சீக்குவல்கள் போலவே இதையும் தனிப்படமாகத் தாராளமாகப் பார்க்கலாம்.