சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் பட்டாக்கத்தி மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் தலைமை செயலக காலனி போலீசாரால் 18 ம் தேதி கைது செய்யப்பட்டார். அன்று இரவே அவர் விசாரணையின் போது உயிரிழந்தார்.
இந்த வழக்கானது கடந்த மாதம் 24ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சட்டசபை கூட்டத்தில் விக்னேஷ் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை தொடர்வதாக அறிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நேற்று காலை 11 மணி முதல் விக்னேஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பவுன் ராஜ், ஊர் காவல் படை காவலர் தீபக் ஆகிய 3 பேர் உட்பட தலைமைச் செயலக காலனி காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கணபதி, எழுத்தர் முனாஃப், ஆயுதப்படை காவலர் கார்த்திக், தலைமை காவலர் குமார், பெண் காவலர் ஆனந்தி ஆகிய 9 போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
நேற்றைய விசாரணையில் காவலர் பவுன்ராஜ் மற்றும் காவலர் முனாஃப் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
இன்றும் விசாரணை தொடர்ந்த நிலையில் மேலும் 4 போலீசாரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள காவலர்களான பவுன்ராஜ், முனாஃப் மற்றும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள தலைமைக் காவலர் குமார் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் தீபக் உட்பட 4 பேர் என மொத்தமாக 6 நபர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க – திமுக அரசின் ஓராண்டு சாதனை ஆட்சியை பாமக மனதார பாராட்டுகிறது: ஜி.கே.மணி
நேற்று காலை 11 மணியிலிருந்து நடத்தப்பட்ட விசாரணையில் விக்னேஷை பிடிக்கும் போது காவலர்கள் பவுன்ராஜ் மற்றும் தீபக் ஆகியோர் சேர்ந்து தாக்கியதும், பின்னர் காவல் நிலையம் அழைத்து வந்து காவலர் முனாஃப் மற்றும் தலைமை காவலர் குமார் உட்பட ஆயுதப்படை காவலர் இருவர் சேர்ந்து தாக்கியதும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக விக்னேஷின் தலையில் லத்தியால் கடுமையாக தாக்கியது காவலர் முனாஃப் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், விக்னேஷ் கொலை வழக்கில் புதிதாக எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவும் சேர்க்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 6 போலீசார் கைதான நிலையில் மேலும் போலீசாரின் கைது எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.