Congress lists out 8 questions for govt on ‘compromise of national security, territorial integrity’ – News18 Tamil

எல்லைப்பகுதியில் சீனா, இந்தியா படைகளை வாபஸ் பெறுவது பற்றி ராஜ்நாத் சிங் பேசியதை முன் வைத்து காங்கிரஸ் தரப்பிலிருந்து 8 கேள்விகள் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிராந்திய ஒருமையிலும் தேசப்பாதுகாப்பிலும் மத்திய அரசு சமரசம் செய்து கொள்கிறது என்று காங்கிரஸ் சாடியது.

கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் இந்தியாவும் சீனாவும் படைகளை வாபஸ் பெற ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளூமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, “அதாவது சீனா தன் படைகளை இந்தியப் பகுதிக்குள் கொண்டு வந்து அங்கு முகாம்களையும் கட்டடங்களையும் கட்டுவதற்கு முன்பிருந்த நிலை எப்போது திரும்பும் என்று உத்தரவாதம் கூறாமலேயே லடாக் பகுதியில் படைகளை வாபஸ் பெற ஒப்பந்தம் மேற்கொண்டது தேசப்பாதுகாப்பை சமரசம் செய்வதாகாதா” என்று கேள்வி எழுப்பினார்.

“மோடி அரசு தேசப்பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்கிறது. இந்தியாவின் பிராந்திய ஒருமையிலும் சமரசம் செய்கிறது. ராஜ்யசபாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதிலிருந்து இதுதான் தெளிவாகிறது.

பிரதமர் நரேந்திர மோடி சீனா என்ற பெயரைக் கூறவே பயப்படுகிறார். இது இப்படியிருக்க நாம் எங்கே தேப்சாங் சமவெளிகள், கோக்ரா ஹாட்ஸ்பிரிங்ஸ் செக்டார், பாங்காங் லேக் ஏரியா, தெற்கு லடாக்கிலிருந்து சீனாவை பின்னுக்குத் தள்ளிவிட்டொம் என்பதை எப்படி நம்புவது?

மாதிரி படம்

பாதுகாப்பு அமைச்சரோ தவறான தகவலை அளிக்கிறார், தவறாக வழிநடத்துகிறார். சீனப் படைகள் இந்தியப் பகுதிகளிலிருந்து வாபஸ் பெறுவது எப்போது என்பதன் முழு உத்தரவாதங்களை ராஜ்நாத் சிங் அளிக்கவில்லை.

இது தொடர்பாக காங்கிரஸின் 8 கேள்விகள் வருமாறு:

1. மோடி அரசும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் சீனா தன் படைகளை இந்தியப்பகுதிக்குள் கொண்டு வந்து அங்கு சில அமைப்புகளை உருவாக்கிய ஏப்ரல் 2020-க்கு முந்தைய நிலை திரும்புமா என்பது பற்றி உறுதியளிக்க மறுக்கின்றனர். இந்தியாவின் பிராந்திய ஒருமையை பாதுகாப்பதில் பிரதமரும் ராஜ்நாத் சிங்கும் தோல்வியை ஒப்புக் கொள்வார்களா?

2. மோடி எப்போதும் சீனப்படைகள் முழுதும் வாபஸ் பெறப்பட வேண்டும் என்று கூறிவந்தார், பின் ஏன் பாங்காங் சோ லேக் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட படை வாபஸுக்கு ஒப்புக் கொண்டார். அதுவும் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை இந்தியாவுக்கு சாதகமில்லாமல் செய்து விட்டு பகுதி விலகலுக்கு ஏன் ஒப்புதல் அளித்தார்?

3. பாங்காங் ஏரிப்பகுதியிலும் ஃபிங்கர் 4 முதல் பிங்கர் 8 வரை இந்தியப் படைகள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்ததே. எல்.ஏ.சி என்பது பிங்கர் 8வரை உள்ளதே. ராஜ்நாத் சிங் கூற்றுப்படி இப்போது இந்தியப் படைகள் பிங்கர் 3 வரை வாபஸ் பெறுகின்றன. இது இந்திய எல்லையை இந்தியாவுக்கு சாதகமற்றதாக்காதா? பிங்கர் 8வரை எல்லை இருக்கும் போது இப்போது பிங்கர் 3-8 பகுதியை பஃபர் ஸோன் என்று மாற்றுவதாகாதா? இது இந்திய பிராந்திய ஒருமையைக் க்காப்பாற்றும் செயலா?

4. பாங்காங் ஏரியின் தெற்குப் பகுதியில் சீன படைகளின் தாக்குதலை நம் படை வீரர்கள் வெகு தைரியமாக எதிர்கொண்டனர். ஆனால் இன்று கைலாஷ் மலைத்தொடர் பகுதியிலிருந்து நம் படைகளை வாபஸ் பெற ராஜ்நாத் சிங் ஒப்புக் கொண்டு வந்துள்ளார். இந்தியப்படைகள் ஆதிக்கம் செலுத்திய கைலாஷ் மலைத்தொடரிலிருந்து ஏன் இந்தியப் படைகளை வாபஸ் பெற ஒப்புக் கொண்டனர் என்பதை மோடி அரசும் ராஜ்நாத் சிங்கும் விவரிக்க முடியுமா? இது தேசப்பாதுகாப்பின் மீது சமரசம் செய்து கொள்வதுதானே?

5. சீன துருப்புகள் எல்.ஏ.சியில் நுழைந்து 18 கிமீ நம் பகுதியை ஆக்ரமித்துள்ளனர். நம் படைகளின் ரோந்துப்பணியையும் அவர்கள் முடக்கியுள்ளனர். இது என்ன?

6. கோக்ரா ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியிலும் சீன ஆக்ரோஷம் தொடர்ந்து இருந்து வருகிறது. இங்கு ஏன் சீனப்படைகளை திரும்பி அனுப்புவது பற்றி மோடியும் ராஜ்நாத் சிங்கும் மவுனம் காக்கிறார்கள்?

7. தெற்கு லடாக்கில் சுமூர் வரை சீனப்படையினரும் ரோந்து சுற்றுகிறார்கள் என்று செய்திகள் வெளிவருகின்றன. ஏன் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் இந்த ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடம் குறித்து வாயைத்திறக்க மறுக்கின்றனர்?

8. மூத்த அமைச்சராக ஜெனரல் வி.கே.சிங், தேச நலன்களுக்கு விரோதமாக இந்தியாதான் அங்கு படைகளை கொண்டு செல்வது போல் பேசுவது ஏன்? மன்னிக்க முடியாத இதையும் ஏன் மோடியும் ராஜ்நாத் சிங்கும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்? இந்தியாவின் ராணுவ நிலையை சிக்கலுக்குள்ளாக்கும் விகே சிங்கை ஏன் மோடி அரசு நீக்கவில்லை? அல்லது மோடி அரசுக்காக விகே சிங் இப்படி அறிக்கை விடுக்கிறாரா?

மேற்கண்ட கேள்விகளுக்கு இந்திய மக்கள் பதில் கேட்கின்றனர். இந்திய தேசப்பாதுகாப்பிலும் பிராந்திய ஒருமையிலும் மோடி அரசு சமரசம் செய்து கொள்கிறது, இதற்கான பதில் தேவை” என்று ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

Leave a Comment

Your email address will not be published.