Food Politics in Tamil Nadu: பீஃப் பிரியாணி தடை: தமிழ்நாட்டிலும் வலுப்படுகிறதா ‘உணவு’ அரசியல்?! – is it becoming strong the food politics in tamil nadu because of beef biryani ban

2004இல் சுனாமியினால் தமிழக கடற்கரையோரப் பகுதிகள் சின்னாபின்னமான போது நிறைய பேர் தன்னார்வத்துடன் கிளம்பிச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவும் உடைகளும் தந்து உதவினர். அப்போது, பேரலையில் சிக்கி வாழ்விழந்த சிலர் தங்கள் கைகளில் திணிக்கப்பட்ட சாம்பார் சாத பொட்டலங்களை வீசி எறிந்ததாக ஒரு தகவல் உண்டு. அந்த மாதிரியான தருணங்களில், அந்த உணவைத் தந்தவர்கள் எத்தகைய வார்த்தைகளை உதிர்த்திருப்பார்கள் என்பது நமக்கு நன்கு தெரியும். தினமும் மீன் சார்ந்த உணவைத் தவிர வேறெதுவும் தெரியாத அம்மக்கள் எப்படித் தங்களுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஒன்றை உண்பார்கள் என்ற கேள்வி, இந்த இடத்தில் நம் மனதில் தோன்ற வேண்டும். நாம் உண்பதைவிட, அவர்கள் என்ன உணவை உண்ணுவார்கள் என்றறிந்து பரிமாறுவது உத்தமம்.

திருப்பத்தூரில் நடந்திருக்க வேண்டிய பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணிக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் மீண்டும் இதனை நினைவுபடுத்தி தொலைத்திருக்கிறது.

உணவில் ரசனை!

ஒரு வட்டாரத்தில் என்ன காய்கறிகள் விளைகிறதோ, அதையே உண்ண வேண்டும் என்கிறது இயற்கையோடு இயைந்த வாழ்வு. மாமிசம் சார்ந்த உணவுகளுக்கும் அது பொருந்தும். குறிப்பிட்ட நிலப்பரப்பில் எத்தகைய வானிலை நிலவுகிறதோ, அங்கு என்னென்ன உணவுப் பொருட்கள் கிடைக்கிறதோ, அதற்கேற்றவாறு அவ்வட்டார சமையல் முறையும் அமையும். இதனாலேயே, ஒரு மாநிலத்தின் வெவ்வேறு வட்டாரங்களில் ஒரே உணவுப்பொருள் பல வகையாகச் சமைக்கப்படுகிறது. உணவில் ரசனை கொண்டவர்கள் அவற்றைத் தேடித் தேடி தின்னுவதையே வாழ்வாகக் கொண்டிருக்கின்றனர். காய்கறி சார்ந்தது, இறைச்சி சார்ந்தது என்று தனியாகப் பிரிக்கும் வழக்கம் அவர்களிடம் கிடையாது. இந்த ரசனை பரந்து விரிந்திருப்பதற்கு யூ-டியூபில் ஹிட்களை அள்ளும் சமையல் வீடியோக்களே சாட்சி. அந்த காரணமே சில தனியார் அமைப்புகள், உணவகங்கள், குறிப்பிட்ட பண்டிகைகளின் போது நடத்தப்படும் உணவுத் திருவிழாக்களில் மக்களைத் திரள வைக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மே 13, 14, 15ஆம் தேதிகளில் தமிழ்நாடு அரசு சார்பில் ‘பிரியாணி திருவிழா’ நடத்தப்படுவதாகச் சொல்லப்பட்ட அறிவிப்பும் அத்தகைய ஆர்வத்தை உந்தித் தள்ளின. பிரியாணி சார்ந்த வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நோக்கமே இந்நிகழ்ச்சியின் பின்னிருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், இவ்விழாவில் ‘பீஃப் பிரியாணி’க்கு அனுமதி மறுக்கப்படுவதாக உத்தவு பிறப்பித்திருந்தார் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஸ்வாஹா. அதாகப்பட்டது கோழி, ஆட்டிறைச்சி, மீன், இறாலுக்கு மட்டுமே விழா நடைபெறும் வளாகத்தில் அனுமதி தரப்பட்டிருந்தது. அரசு விழாவொன்றில் மாட்டிறைச்சிக்குத் தடை விதித்து உத்தரவிட்டது விடுதலைச்சிறுத்தைகள் உட்படப் பல்வேறு அரசியல் கட்சியினரிடமும், அமைப்புகளிடமும் எதிர்ப்பை உருவாக்கியது.
பிரபலங்களை குறை கூறும் மனப்போக்கு சரிதானா?
உணவில் பாகுபாடு!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள 4 தாலுகாக்களில் வாணியம்பாடியும் ஆம்பூரும் இடம்பெறுகின்றன. இவ்விரண்டு நகரங்களுமே பிரியாணிக்கு பேர் பெற்றவை. அவ்வட்டாரத்தில் இருப்பவர்களைத் தவிர திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களிலிருந்தும் இவ்வூருக்கு பிரியாணியை ருசிக்க மக்கள் வருவதுண்டு.

இங்கு சிக்கன், மட்டன் பிரியாணி போலவே ‘பீஃப்’ பிரியாணிக்கும் தனி ரசிகர் கூட்டம் உண்டு. மட்டனை விட விலையில் மலிவான, சத்துக்கள் நிறைந்த மாட்டிறைச்சியை உண்ணும் வழக்கம் வெகுகாலமாகத் தொடர்ந்து வருகிறது. அதுவுமில்லாமல், அவ்வட்டாரத்தைச் சேர்ந்தவர்களால் நெடுங்காலமாக அவ்வுணவு உண்ணப்பட்டும், சமைக்கப்பட்டும், விற்பனைக்கு உட்படுத்தப்பட்டும் வருகிறது. அப்படியிருக்க, பிரியாணி விற்பனையை விரிவுபடுத்தும் நோக்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் ’பீஃப் பிரியாணி’யை மட்டும் தவிர்ப்பது முறையானதாகாது. தவிர, விழாவுக்கு வரும் அப்பகுதி மக்கள் விரும்பும் ஒரு உணவைப் பெற முட்டுக்கட்டை இடுவதும் சரியானதாகாது.

இதனால், தமிழ்நாட்டில் ஒரு மாவட்ட ஆட்சியரே மாட்டிறைச்சிக்குத் தடை விதித்துவிட்டார் எனும் தகவல் பெருமளவில் விவாதங்களை எழுப்பியது. இந்த நிலையில், அசானி புயலைக் காரணம் காட்டி விழா நடைபெறுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புயலின் தாக்கத்தினால் மழை பெய்து கொண்டிருந்தாலும், இவ்வறிவிப்பு இந்த விவகாரத்தில் ஒரு தற்காலிக முற்றுப்புள்ளியாகவே கருதப்படுகிறது.

தற்போது தமிழ்நாடு பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் ’பீஃப் பிரியாணிக்கு தடை’ விதித்தது குறித்து திருப்பத்தூர் ஆட்சியர் அமர் குஸ்வாஹாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் ஒரு மாவட்டத்தில் இப்படியொரு தடைக்கு அவசியம் என்னவென்ற கேள்வியும் இதனூடே மேலெழுகிறது.

shawarma எப்படி தயாராகிறது?

தமிழ்நாட்டில் உணவு அரசியல்?!

மாட்டிறைச்சியை உண்டார், வைத்திருந்தார் என்று குறிப்பிட்ட சில நபர்கள் கும்பல் படுகொலைகளுக்கு ஆளாவது கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக வட இந்திய மாநிலங்களை உலுக்கி வருகிறது. உணவுக் கலாசாரம் சார்ந்த இந்த அடக்குமுறை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டுமே இதிலிருந்து விதிவிலக்காக இருந்து வருகின்றன. மாட்டிறைச்சி உட்பட எந்த உணவையும் இங்கு உண்ண முடியும் என்ற நம்பிக்கை முற்போக்காளர்களிடம் பலப்பட்டிருந்தது. குஸ்வாஹாவின் தடை உத்தரவு அதில் பொத்தல் விழச் செய்திருக்கிறது.

ஏற்கனவே தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேச விழா நிகழுமா இல்லையா என்ற கேள்விக்கு பதில் கிடைக்காத அளவுக்கு பாஜகவினரும் திமுகவினரும் சமீப நாட்களாக மோதி வந்தனர். இந்த விவகாரம் பெரிதாக திராவிடர் கழகம் வழி வகுத்தது என்றால், அது பற்றி அதிகம் பேசியவர்கள் பாஜகவினர் தான். ஆனால், அப்படியொரு விவாத மேடையை உருவாக்குவதற்கு முன்பே பிரியாணி திருவிழா விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

இருந்தாலும், தமிழ்நாட்டிலும் உணவு அரசியலை முன்வைத்து பிரச்சனைகள் மீண்டும் முளைக்குமோ என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது இவ்விவகாரம். திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு மட்டுமே இக்கேள்வியை இல்லாமல் ஆக்க முடியும். ஆனால், அது எளிதல்ல! ஏனென்றால், ‘பிரியாணி திருவிழா’ குறித்த செய்திகள் வெளியான முதலிரண்டு நாட்களில் மாட்டிறைச்சிக்கு மட்டுமே தடை எனும் தகவலே இடம்பெற்றிருந்தது. தற்போதுள்ள செய்திகளில், பன்றியிறைச்சிக்கும் தடை விதிக்கப்பட்ட தகவல் புதிதாக இணைக்கப்பட்டிருக்கிறது.

மாட்டிறைச்சி, பன்றியிறைச்சி இவ்விரண்டு வார்த்தைகளுமே 1857 சிப்பாய் கலகத்திற்கு காரணமானவை என்பதை நமக்குச் சொல்கிறது வரலாறு. ஏன், மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்ட செய்திகள் வெளியான போதே அவற்றுடன் பன்றியிறைச்சிக்கும் தடை விதிக்கப்பட்ட தகவல் இடம்பெறவில்லை என்பது முடிவேயில்லாத கேள்வி. ஆனால், அவ்விரு வார்த்தைகளிலும் மிகப்பெரிய உணவு அரசியல் இருக்கிறதென்பதை தாராளமாகச் சொல்ல முடியும்!

Source link

Leave a Comment

Your email address will not be published.