கடந்த 2001ம் ஆண்டு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ எம்.கே.பாலன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தனது மகன் ஹரிஹரனை முன்கூட்டியே விடுவிக்ககோரி அவரது தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தண்டனை கைதிகள் 1,650 பேரை விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த அரசாணையின் அடிப்படையில் தனது மகனை விடுவிக்க அரசு மறுத்து விட்டதாக கூறியிருந்தார்.
இந்த மனுவை. விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் அமர்வு, இரண்டு கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாலும், சிறையிலும் நன்னடத்தை விதிகளை ஹரிஹரன் கடைபிடிக்காததாலும் அவரை முன்கூட்டியே விடுவிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், தண்டனை கைதிகள் முன்கூட்டியே விடுதலை கோர சட்ட ரீதியாகவோ, அடிப்படை ரீதியாகவோ உரிமையில்லை என குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த கருத்து, மற்ற வழக்குகளில் சிறையில் உள்ளவர்களை முன்கூட்டியே விடுவிப்பது குறித்து பரிசீலிப்பதற்கு எந்த தடையும் இல்லை எனவும் தெளிவுப்படுத்தியுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.