இந்திய தத்துவங்கள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவற்றுக்கு ‘சத் தர்ஷன்’ என்று பெயர். தர்ஷன் என்றால் என்ன? இதுதான் உண்மை, இதுதான் இறுதி, இதுதான் நிச்சயம் என்கிற ஒரு கோட்பாட்டை குறிப்பிடுவதுதான் அந்த தர்ஷன். சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம் ஆகியவை சத் தர்ஷன்கள். இவை ஆஸ்திக பள்ளியென வகைப்படுத்தப்பட்டுள்ளன. வேதங்களை அடிப்படையாக கொண்ட இந்த தர்ஷன்கள் பற்றி அறிய அடிப்படைகளைத் தெரிந்துகொள்வது அவசியம்.
சாங்கியம் – கபில முனிவர்
யோகம் – மகரிஷி பதஞ்சலி
நியாயம் – கவுதம முனிவர்
வைசேஷிகம் – ரிஷி கணாதர்
பூர்வ மீமாம்சம் – ஜைமினி முனிவர்
உத்தர மீமாம்சம் – பத்ராயணர் (தொகுத்தவர்: வியாசர்)
இவை ஒவ்வொன்றும் பல்வேறு கருத்துகளையும் தர்க்கங்களையும் கொண்டவை.
இவை தவிர மூன்று தத்துவங்களாக புத்த மதம், ஜைன மதம், சார்வாகம் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.
சாங்கிய காரிகை
சாங்கியம் என்னும் இந்தத் தத்துவத்தை அளித்தவர் கபில முனி. அளித்தவர்தான் இவர். எழுதியவர் யாரென்று சொல்ல முடியாது. அவர் எதையும் நேரடியாக எழுதியாக ஆதாரங்கள் இல்லை. கபில முனி ரிக் வேத காலத்தை சேர்ந்தவர். பகவத் கீதையில் கிருஷ்ணர், ‘ரிஷிகளில் நான் கபிலராக இருக்கிறேன்’ என்கிறார். அத்தனை பெருமைக்குரிய கபிலர் தனது சிஷ்ய பரம்பரைக்கு தன் தத்துவத்தை அளித்திருக்கிறார். ஈஸ்வர கிருஷ்ணன் எழுதிய சாங்கிய காரிகை என்னும் சமஸ்கிருத நூலே இவற்றில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. இதில் 72 காரிகைகள் (ஸ்லோகங்கள்). இந்த சுலோகங்களுக்கு விரிவுரை எழுதுவதற்கு பெயர் பாஷ்யம், அவற்றை எழுதுபவர்கள் பாஷ்ய காரர்கள் எனப்படுவார்கள்.
சாங்கியம் சொல்வது என்ன? இந்த உலகம் ஆதியில் ஒரு பொருளாக இருந்தது. அதிலிருந்து மூன்று குணங்களின் விகித கலவையால் உருவானது. ஒரு காலத்தில் மூன்று குணங்களும் ஒரே அளவில் இருந்ததாகவும், ஒரு காலகட்டத்தில் வெவ்வேறு அளவில் மாறியபோது உலகம் உருவானதாகவும் கூறுகிறது. சாங்கியத்தை பொறுத்தவரை உணர்வுகளும் எண்ணங்களும் உண்மை அல்ல, தன் உணர்வு என்பது மட்டுமே உண்மை. ப்ரக்ருதி என்னும் பொருளும், புருஷா என்னும் அறிவும் சேர்ந்தது. சிவ சக்தி என்று உருவகப்படுத்தப் படுவது இதுவே.
சாங்கியம் கடவுளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. ஆத்ம ஞானமே உண்மை. அதுவே முக்கியம். இதிகாசங்களைப் போல எந்த கதை வழி செய்தியும் இல்லாமல், இது நேரடியாக வாழ்க்கைத் தத்துவத்தைச் சொல்கிறது. பிரக்ருதி, மூலப்ரக்ருதி, புருஷார்த்தம் என்று மூன்று குணங்களையும், 23 தத்துவ குணங்களையும், உலகின் துன்பங்களையும், அவற்றை பகுத்தறியும் சூட்சுமங்களையும் இது சொல்கிறது.
முக்தி, மோட்சம் என்றால் என்ன? உடல், உயிர், ஆன்மா… இதில் எது எதிலிருந்து விடுபடுகிறது, ஏன் விடுபட வேண்டும்? புத்தி, அகங்காரம், மனஸ், ஞானேந்திரியம், கர்மேந்திரியம், தன்மாத்ரா, மகா பூதங்கள் பற்றிய நேரடி விளக்கங்களும் இதில் இருக்கின்றன.
முதல் ஸ்லோகம் அல்லது காரிகையே உலகின் துன்பத்துக்குக் காரணம் என்ன, அதிலிருந்து விடுபடுவது எப்படி என்றுதான் தொடங்குகிறது. சாங்கிய தத்துவம் குறித்து தொடர்ந்து அறியலாம்.
கட்டுரையாளர்:
கோவையை சேர்ந்த வழக்கறிஞரும், யோகா ஆசிரியருமான விஜி ராம், விகடனின் ‘அறம் செய்ய விரும்பு’ திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேர்களில் ஒருவர். மைத்ரி யோகா பள்ளியின் நிறுவனர்.
இவர் இந்தியாவெங்கும் பயணம் செய்து அந்தந்த ஊர்களின் சிறப்பு உணவுகள் பற்றி ‘சீக்ரெட் கிச்சன்’ நூலும், பாரம்பரிய உணவு முறைகள் குறித்து ‘மில்லட் மேஜிக்’ நூலும் எழுதியுள்ளார். குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கான ’குட் டச் பேட் டச்’ நூலை ‘க்ருஷ்ணி கோவிந்த்’ என்ற பெயரில் எழுதியிருக்கிறார்.