1909-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி இந்தியா திரும்பிய அன்னிபெசண்ட், கிருஷ்ணமூர்த்தியையும் அவரது சகோதரன் நித்யாவையும் முதன்முறையாகச் சந்தித்தார். இச்சந்திப்பிலேயே ஒரு பாசப்பிணைப்பு அவர்களிடையே மலர்ந்தது. லெட்பீட்டரின் தீர்க்கதரிசனமான பிரகடனத்தை முழுவதுமாக ஏற்றுக்கொண்ட அன்னிபெசண்ட், அவர்களைத் தத்தெடுத்துக் கொண்டார். அவர்களுக்கு ஒரு தாயாக, ஆசிரியராக, தோழராக இருந்து தனது முழு கண்காணிப்பில் அவர்களைப் பராமரிக்கத் தொடங்கினார்; கிருஷ்ணமூர்த்தியின் எதிர்காலத்தை வழிநடத்திச் செல்வதையே தனது புனிதப்பொறுப்பாக மேற்கொண்டார்.
உலக ஆசான் வருகையில் நம்பிக்கை கொண்டவர்கள், கிருஷ்ணமூர்த்தியைத் தலைவராகக் கொண்டு ‘Order of the Star in the East’ என்ற பெயரில் உலகளாவிய அமைப்பு ஒன்றை 1911-ல் நிறுவினர். உலக ஆசானின் வருகைக்கான செயல் வடிவம் அப்போது நிர்ணயிக்கப்பட்டது. வாரணாசியில் நடைப்பெற்ற பிரம்மஞான சபையின் ஆண்டுக் கூட்டத்தில் கிருஷ்ணமூர்த்தியே உலக ஆசானின் அவதாரம் என உறுதியாக, வெளிப்படையாகவே அறிவித்தார் அன்னிபெசண்ட். இக்கூட்டத்திலிருந்த உறுப்பினர்கள், உணர்ச்சிப் பெருக்கால், கிருஷ்ணமூர்த்தியின் பாதங்களைத் தொட்டு வணங்கினர்.
இந்த இயக்கத்தின் தலைவராக தன்னுடைய கருத்துக்களைக் கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து எழுதிவந்தார். உலக நாடுகளுக்குச் சென்று சொற்பொழிவாற்றத் தொடங்கினார். 1922 காலகட்டத்தில் அவருடைய சகோதரர் நித்யாவிற்குக் காசநோய் ஏற்பட்டு உடல்நலம் குன்றியது. அத்தருணத்தில், நித்யாவைப் பராமரிக்க அமெரிக்காவின் ஓஹாய் பள்ளத்தாக்கில் அன்பர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த குடிலில் சகோதரர்கள் இருவரும் வசிக்கத் தொடங்கினர்.
கிருஷ்ணமூர்த்தியின் ஆத்மவிசாரணை தீவிரம் அடையத் தொடங்கியது. வெளியுலக பிரக்ஞையற்று, ஸ்தூல உடலின் உணர்விற்கும் அப்பாலுள்ள ஒரு தன்னுணர்வில் அடிக்கடி ஆழ்ந்துபோவார். ஆழ்ந்த தியான நிலையில் எப்போதும் காணப்பட்டார். இந்நிகழ்வுகள் அவரது வாழ்க்கையின் அடித்தளத்தையே அசைத்தன.