ஜோஜியாக செம ஸ்லிம் ஃபகத் ஃபாசில். தன் முதிர்ச்சியான முகத்தையும் உடல்மொழியையும் விடுத்து விடலையின் கூறுகளை, வீட்டின் செல்லப்பிள்ளையின் தன்மைகளை மெனக்கெட்டு திரையில் கொண்டு வந்திருக்கிறார். எப்போதும் தன்னைச் சுற்றி கதையை அமைக்காமல், கதையின் போக்கில் நாயகனாக உருமாறும் அதே டெம்ப்ளேட்டுடன் இதிலும் பொருந்திப் போயிருக்கிறார். தொடர்ந்து பெரும்பாலான படங்களில் கொஞ்சம் நல்லவன் நிறையக் கெட்டவன் என்ற ஃபார்முலாவையே இங்கேயும் பின்பற்றியிருக்கிறார். இப்படி ஒரு வட்டத்துக்குள் இந்தப் பாத்திரமும் சிக்குவது மட்டும் சற்றே நெருடல்.
ஃபகத்தைப் போலவே அனைத்து நடிகர்களும் யதார்த்தமாக வந்துபோகிறார்கள். மதம் தொடர்பான மூட நம்பிக்கைகளில் சிக்காமல் கண்டிப்பான மூத்த அண்ணனாக வலம் வரும் பாபுராஜ், அவரின் மகனாக வரும் பதின்பருவ சிறுவன் பாப்பி, ஃபகத்தின் அண்ணி பின்ஸியாக வரும் உன்னிமாயா பிரசாத், சர்ச் ஃபாதராக வரும் பேசில் ஜோசப், அப்பாவாக வரும் சன்னி என அனைவருமே கதையின் ஓட்டத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார்கள். எப்போதும் பெரியதொரு குடும்பத்தில் பிரச்னை எனும்போது தூரத்துச் சொந்தமாக இருக்கும் ஏதோவொரு மாமா வந்து சமரசம் பேசுவார். அப்படியான ஒரு பாத்திரத்தில் டாக்டர் ஃபெலிக்ஸாக ஷம்மி திலகன். படத்தில் இத்தனை மனிதர்கள் இருந்தும் லாக்டௌன் சினிமா என்பதால் தோட்டம் கொண்ட பெரிய வீடு, ஒரு மருத்துவமனை எனக் குறைவான இடங்களில் மட்டுமே கதை நகர்கிறது.
கொஞ்சம் பிசகினாலும் ஒரு லோ பட்ஜெட் நாடகமாக மாறியிருக்கும் என்கிற ரீதியிலான இந்த சினிமாவை கட்டிக் காத்திருப்பது சைஜு காலித்தின் கேமராவும் கிரண் தாஸின் படத்தொகுப்பும்தான். எதிர்பார்க்கும் நேரத்தில் அமைதி காக்கும் ஜஸ்டின் வர்க்கீஸின் பின்னணி இசை, எதிர்பாரா தருணங்களில் எல்லாம் ஒலித்து படத்துக்கான த்ரில்லர் டெம்போவைக் கூட்டியிருக்கிறது.