நடிகை கங்கனா ரணாவத் லாக்அப் என்ற ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகிறார். இதில் பங்கேற்று இருப்பவர்கள் தங்களது வாழ்க்கையில் நடந்த ரகசியங்களை பகிர்ந்து வருகின்றனர். பாலிவுட்டில் புதைந்திருக்கும் சில உண்மைகளை கங்கனா ரணாவத் இந்த நிகழ்ச்சியில் தெரிவித்து வருகிறார். தான் பாலிவுட்டில் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டார் என்பது குறித்தும், தனது வாழ்க்கையில் நடந்த பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் மற்றும் திருமணமானவருடன் தனக்கு ஏற்பட்ட நெருக்கம் உட்பட பல உண்மைகளை கங்கனா இதில் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் டிசைனர் சாய்ஹா ஷிண்டே கலந்து கொண்டு சில உண்மைகளைத் தெரிவித்தார். தன்னை பிரபல டிசைனர் ஒருவர் அவரது ஹோட்டல் அறைக்கு அழைத்தார் என்றும், அங்கு அவரைக் கட்டிபிடித்துக்கொண்டதாகவும், உறவு வைத்துக் கொண்டதாகவும், அடிக்கடி இது நடந்ததாகவும் தெரிவித்திருந்தார். இது குறித்து தனது தோழிகளிடம் பேசிய போது அவர்களையும் அவர் இது போன்று செய்திருந்தது தெரிய வந்ததாகத் தெரிவித்தார்.
அவரின் கதையை கேட்ட பிறகு இதற்கு பதிலளித்த கங்கனா, “பாலிவுட் மற்றும் பேஷன் துறையில், குறிப்பாக இளம் தலைமுறையிடம் பாலியல் ரீதியிலான சுரண்டல்கள் சர்வசாதாரணம். எவ்வளவுதான் இத்துறையை நாம் நியாயப்படுத்தினாலும் அதுதான் உண்மை. இது பல வாய்ப்புக்களைக் கொடுக்கிறது. அதேபோல் பலரது கனவை சிதைத்து நிரந்தர காயமாக்கியும் இருக்கிறது. இது பாலிவுட்டின் கறுப்பு உண்மை. ஒவ்வொரு துறையிலும் பாலியல் சுரண்டல்கள் இருக்கின்றன. ‘#MeToo’ வந்த போது என்ன ஆனது? குற்றச்சாட்டுக்களைத் தெரிவிப்பவர்களைக் காணாமல் போகச் செய்துவிடுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் ஆதரவு கொடுத்த போது எனக்கும் தடை விதித்தார்கள். அதே சமயம் நான் ஆதரவு கொடுக்கும் பெண்கள் காணாமலும் போய்விடுகின்றனர்” என்று தெரிவித்தார்.