அண்மைக் காலமாக தென்னிந்திய படங்கள், பல மொழிகளில் வெளியிடப்பட்டு வருகிறது. இப்படங்கள் ‘பான்-இந்தியா’ படங்கள் எனக் குறிப்பிட்டு பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சன் திரைப்படத் துறையை தனித்தனியாக முத்திரை குத்துவது முற்றிலும் தவறு என்றும் ‘பான்-இந்தியா’ என்ற வார்த்தை தவறானது எல்லா படமும் இந்தியப் படம்தான் என்று கூறியுள்ளார். மேலும் தென்னிந்தியப் படங்கள் இப்போது மட்டுமல்ல எப்போதும் நல்ல கதைகள் கொண்ட படத்தை எடுத்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.
இதுபற்றி பேசிய அவர், “எந்தவொரு திரைப்படத் துறையையும் தனியாக முத்திரை குத்துவது முற்றிலும் நியாயமானதல்ல. ஹிந்தி மற்றும் பிற மொழிகளிலிலிருந்தும் திரைப்படங்கள் ரீமேக் செய்யப்படுகின்றன. இது ஒரு புதிய நிகழ்வு அல்ல. எல்லாக் காலங்களிலும் நல்ல கதைகள் எல்லா மொழிகளிலும் பரிமாற்றம் செய்து கொள்ளப்படும். அதில் தவறில்லை.” என்று கூறினார். மேலும் தென்னிந்தியப் படங்கள் பற்றியும் அண்மையில் வெளியான பான்-இந்தியா படங்களான ‘புஷ்பா’, ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘கேஜிஎஃப்-2’ ஆகிய படங்கள் பற்றியும் கூறிய அவர், “நல்ல படங்கள் வெற்றி பெறுகின்றன. அவர்கள் எப்போதும் நல்ல படங்கள் கொடுத்து வருகின்றார்கள்” என்று கூறினார்.
மேலும், “இது ஒரு புதிய நிகழ்வு அல்ல. நாங்கள் ஒரு பெரிய குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம். எனவே, நல்ல கதைகளின் பரிமாற்றம் இங்கு கண்டிப்பாக நடக்கும். கருத்துக்கள் பற்றாக்குறை இருந்தால் கதைகளின் பரிமாற்றம் நடக்காது. இது படைப்பாளிகள் தேர்வு செய்வதைப் பொறுத்தது” என்று கூறியுள்ளார்.