தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பிய அவர், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்து வருகிறார். இதனால், தேமுதிகவின் அரசியல் நடவடிக்கைகளை அவரது மனைவியும் தேமுதிகவின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், மைத்துனன் சுதீஷ், மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோரே கவனித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின்போது, தேமுதிகவுக்கு புதிய ரத்தம் பாய்ச்ச வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றன. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை செயல் தலைவராக்க வேண்டும் என்ற குரல்களும், அவரது மகன் விஜய பிரபாகரனிடம் இளைஞரணியை ஒப்படைக்க வேண்டும் என்ற குரல்களும் ஒலித்தன. ஆனால், அதற்கு பிறகு அந்த குரல்கள் அடங்கிய நிலையில், எதிர்வரவுள்ள தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.