அப்போது, அருகில் புதர் மறைவில் மறைந்திருந்த அந்தப் பொறாமைக்காரர்களின் தலைவன், ஒரு செங்கல்லை எடுத்து அந்தச் சிறுவனின் தலையைக் குறிபார்த்து வீசினான். வெங்கூசா, தம் கரங்களை உயர்த்தி, அந்தச் செங்கல்லை அந்தரத்திலேயே நிற்கும்படி செய்தார். அவர்கள் மற்றொரு செங்கல்லை எடுத்து வீசினார்கள். அது வெங்கூசாவின் நெற்றியில் பட்டு, ரத்தம் பெருகியது. அதைப் பார்த்து மிகுந்த அச்சம் கொண்ட அந்தச் சிறுவன், ”ஐயனே, தாங்கள் எனக்குத் தாயாகவும், தந்தையாகவும், அனைத்துக்கும் மேலான குருவாகவும் இருந்து, என்னிடம் மிகுந்த அன்பு செலுத்துகிறீர்கள். அதன் காரணமாகவே தங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது. ஞான வலிமையும் செல்வ வளமையும் பெற்றிருக்கும் உங்களுக்கு என் காரணமாக இந்த விபரீதம் ஏற்பட்டது கண்டு எனக்கு வருத்தமாக இருக்கிறது. நான் உங்களை விட்டுப் பிரிந்துவிட்டால் இப்படியான விபரீதங்கள் நடக்காது அல்லவா? எனவே, உங்களிடம் இருந்து பிரிந்து செல்ல, என்னை நீங்கள் அனுமதிக்கவேண்டும்” என்று மன்றாடி கேட்டுக்கொண்டான்.