Save Soil | மண்ணை அழிப்பது இயற்கைக்கு எதிரான பெருங்குற்றம் – சர்வதேச மண் விஞ்ஞானி டாக்டர் ரத்தன் லால்

மண் காப்போம் இயக்கம் மிக மிக அவசியம் எனவும் “மற்ற உயிர்களை போல் மண்ணுக்கும் வாழ்வுரிமை உள்ளது; மண் வளத்தை அழிப்பது இயற்கைக்கு எதிராக நிகழ்த்தப்படும் பெருங்குற்றம்” என பிரபல மண் விஞ்ஞானி டாக்டர். ரத்தன் லால் (Soil Scientist) தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் உயரிய சுற்றுச்சூழல் விருதுகளில் ஒன்றான ‘உலக உணவு பரிசு’ (World Food Price award) விருதை பெற்ற பெருமைக்குரியவர் டாக்டர் ரத்தன் லால். மேலும், அமெரிக்காவின் புகழ்பெற்ற ஓஹியோ பல்கலைக்கழகத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பேராசிரியராக பணியாற்றிய அனுபவமிக்கவர். இவர் பருவநிலை மாற்றம், உணவு பாதுகாப்பு மற்றும் தண்ணீரின் தரம் போன்ற சூழலியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மண் வளம் எந்தளவுக்கு முக்கியம் என்பது குறித்து விரிவாக ஆய்வுகள் மேற்கொண்டவர்.

இத்தகைய சிறப்புக்குரிய டாக்டர் ரத்தன் லால் சத்குரு தொடங்கியுள்ள ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார். சத்குருவின் முன்னெடுப்பை மிகவும் பாராட்டி உள்ள அவர், “சத்குரு, ஒரு மண் விஞ்ஞானியாக நான் இதை தவிர வேறு எதையும் எதிர்ப்பார்க்க முடியாது. நீங்கள் கையில் எடுத்துள்ள இந்த இயக்கம் இப்போது மிக மிக அவசியமானது. இது உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும். வெற்றிகரமாக நீங்கள் செய்து காட்டி வரும் காவேரி கூக்குரல் இயக்கத்தின் பணிகள் மற்ற நதிகளுக்கும் மேற்கொள்ளப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.

அத்துடன் மண் வளம் குறித்தும், கார்பன் வெளியீட்டை தடுப்பதில் மண்ணின் பங்கு குறித்தும் அவர் கூறியுள்ளதாவது:

“மண் ஒரு உயிரினம் என்பதையே நான் எப்போதும் சொல்லி வருகிறேன். மேலும் ‘மண்ணின் உரிமைகள்’ என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளேன், அதைத்தொடர்ந்து ‘மண்ணின் உரிமைகள்’ மீதான ஒரு புத்தகத்தை எழுத உள்ளேன்.

ஒவ்வொரு உயிரினத்திற்கும் வாழ்கின்ற உரிமை உள்ளது. மோனார்க் வண்ணத்துப்பூச்சி, கழுகு இவற்றிற்கெல்லாம்  உரிமைகள் உள்ளது. அதைப்போல பாண்டா கரடிகளுக்கென்று ஒரு உரிமை ஆணையம் உள்ளது. துரதிருஷ்டவசமாக நாம் மனிதர்களுக்கு மனித உரிமைகள் இருப்பதைக்கூட ஆங்காங்கே மறந்து விடுகிறோம்.

ஆகவே, மற்ற உயிர்களைப்போல மண்ணிற்கும் உயிர் உள்ளது. மண்ணிற்கும் வாழ்வுரிமை உள்ளது. மண் பாதுகாக்கப்பட வேண்டும். மண்ணின் வளம் மீட்டெடுக்கப்பட வேண்டும். நியாயமான முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும். அதன் மீது வாழும் உயிரினங்கள் செழிக்க, மண் வளம் காக்கப்பட வேண்டும்.

தற்போது 70 லட்சம் உயிரினங்கள் இருப்பதாக அறிவியல் கண்டுபிடித்துள்ளது. அதில் பெரும்பாலானவை மண்ணில் இருப்பவை. ஆகவே பல உயிர்களை வாழ வைக்கும் தன்மை உடைய மண் தனது வளத்தை இழக்கக்கூடாது. எனவே, மண்ணை அழிப்பது இயற்கைக்கு எதிரான பெருங்குற்றம். மேலும் நாமும் இயற்கையின் பாகமாக இருப்பதால், அது நமக்கே எதிரான குற்றம்.

உலகின் பல பிரச்சனைகளுக்கும் மண் வளத்திற்கும் தொடர்பு உள்ளது. உதாரணத்திற்கு, பருவநிலை மாற்றம். ஏறக்குறைய பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது கிமு 2500, 3000 ஆண்டுகளிலேயே விவசாயம் தொடங்கப்பட்டு, சிந்து சமவெளி நாகரிகம், மொஹஞ்சதாரோ ஹரப்பா ஆகியவை கிமு 1200 ஆண்டுகளில் அழிந்தே விட்டது. இது பருவநிலை மாற்றத்தால் நடந்தது.

கால்களுக்கு கீழுள்ள மண்ணை பாதுகாக்காமல் விட்டதால், உலகின் பல நாகரீகங்கள் காணாமல் போயுள்ளன. தற்போதுள்ள நாகரீகத்தை, கார்பன் நாகரீகம் எனச் சொல்வேன். புதை படிவ எரிபொருள் கார்பனை வைத்தே நாம் எல்லாவற்றையும் செய்கிறோம். புதை படிவங்களிலும் கார்பனை அழித்தோம். அதைப்போல மண்ணிலுள்ள கார்பனையும் அழித்தோம்.

மேல் மண்ணான 1 மீட்டர் வரை உள்ள மண், 1,500 ஜிகா டன்கள் அளவிலான கரிம கார்பனை உள்ளடக்கியதாகும். இது நிரந்தர உறைபனி நிலை அல்லாத மண். அதனால் இதில் 2,500 ஜிகா டன் அளவிற்கு கரிம கார்பன் உள்ளது. ஆனால் உலகின் ஒட்டுமொத்த மரங்களும், தாவரங்களும் சேர்த்தாலே 1,500 ஜிகா டன் அளவிலான கரிம கார்பனே உள்ளது. ஆனால், மண்ணில் உள்ள கார்பனை 1 ஜிகா டன் வரை அதிகரித்தால், தாவரங்களில் உள்ள கார்பனை மண்ணுக்கே திருப்பி தந்தால், குறைவான தாக்கத்தை செய்து புவி வெப்பமயமாதலை குறைக்க முடியும்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எனது சகாக்கள் கணித்தது என்னவெனில்: நாம் மண்ணை சரிவர நிர்வகித்தால், 180 ஜிகா டன் வரை கரிம கார்பனை மண்ணிற்கு திரும்ப செலுத்த இயலும். மேலும், விவசாயத்தை மேம்படுத்தி, மர வளர்ப்பினை சரி வர செய்தால், இன்னும் 150, 160 ஜிகா டன் அளவிற்கான கரிம கார்பனை செலுத்த முடியும். எனவே, புவி வெப்பமயமாதலை தடுக்கவும் மண் வளம் அவசியம்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டாக்டர் ரத்தன் லால் போன்ற சர்வதேச விஞ்ஞானிகளும், ஐ.நா அமைப்புகளும் கூறி வருவதையே சத்குரு தனது மண் காப்போம் பயணத்தில் வலியுறுத்தி வருகிறார். குறிப்பாக, மண்ணில் குறைந்தப்பட்சம் 3 முதல் 6 சதவீதம் வரை கரிமப் பொருட்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு அரசாங்கங்கள் உரிய கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், மண் வளத்தை மேம்படுத்தும் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மானியம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறி வருகிறார்.

Also see…

நிலத்தில் நீரை சேமித்து வைத்து கொள்வதற்கும் மண் வளம் மிகவும் அவசியம். கரிமப் பொருட்களின் அளவை 8 முதல் 10 சதவீதம் அளவிற்கு அதிகரித்தால், நீரின் பயன்பாடு 70 சதவீதம் குறையும். அதாவது, 100 லிட்டர் பயன்படுத்துவதற்கு பதிலாக வெறும் 30 லிட்டர் தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்ய முடியும் என்ற விஞ்ஞானிகளின் கருத்தையும் சத்குரு வலியுறுத்தி பேசி வருகிறார்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

Leave a Comment

Your email address will not be published.