தனக்குள் தஞ்சம் புகுந்திருக்கும் வெனம் எனும் ஏலியன் சிம்பியாட்டுக்கும் எட்டி பிராக்குக்கும் முட்டல் மோதல். இந்த நேரத்தில் சிறையிலிருக்கும் சீரியல் கில்லர் க்ளெடஸ் கசடி, பத்திரிகையாளரான எட்டியைச் சந்திக்க விருப்பம் தெரிவிக்கிறார். அடுத்தடுத்த சம்பவங்களில் எட்டி புகழடைய, க்ளெடஸ் மரண தண்டனையை எதிர்கொள்கிறார். அப்போது புதியதொரு ஏலியன் சிம்பியாட்டான கார்னேஜ், க்ளெடஸின் உடம்புக்குள் புகுந்துகொள்ள, அதை எட்டியும் வெனமும் எப்படிச் சமாளித்தார்கள் என்பதே படத்தின் கதை.
வெனமை சுமந்துகொண்டு அல்லல்படும் எட்டியாக டாம் ஹார்டி. எங்கும் தோல்வி, எதிலும் தோல்வி எட்டிக்கு இதில் கொஞ்சம் முகவரி கிடைக்கிறது. உபயம்: வெனம். முக்கியமாக, வெனமுக்கும் இவருக்குமான உரையாடல்கள் ஜாலி, கேலி கலாட்டா! நிஜத்தில் ஒரு CG கதாபாத்திரத்தை மனத்தில் நினைத்துக்கொண்டு அது கொடுக்கும் கவுன்டருக்கு ஏற்றவாறு நடிப்பது என்பது சற்றே சவாலான விஷயம். அதை டாம் ஹார்டி சிறப்பாகச் செய்திருக்கிறார். அவரின் பங்களிப்புதான் இல்லாத அமீபாவுக்கும் அவருக்கும் ஒரு கெமிஸ்ட்ரி இருப்பதாக உணர வைக்கிறது.
முதல் பாகத்தின் எண்டு கிரெடிட்ஸில் எட்டிப்பார்த்த வுட்டி ஹாரல்ஸன் இதில் முழுநேர வில்லன். சீரியல் கில்லர் உடல்மொழி எல்லாம் தன் திறமைக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி என நிரூபித்திருக்கிறார். எள்ளல், பொடிவைத்துப் பேசும் வசனங்கள், காதலியுடன் செய்யும் சாகசங்கள், கார்னேஜுடனான அதிரடி எனப் படத்தின் ஆல்ரவுண்டர் இவர்தான்.